கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கோவை புறநகர பகுதிகளில் கடந்த காலங்களை காட்டிலும் இந்தாண்டு அதிகப்படியான தென்மேற்கு பருவமழை அளவு பதிவாகியிருந்தது. இந்தச் சூழலில், கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே பொதுமக்கள் மத்தியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. முதல் கட்டமாக, 102டிகிரி முதல் 105டிகிரி வரை காய்ச்சல் தீவிரமடைந்து, பின்னர் கை, கால், மூட்டுகளிலும், எலும்பு இணைப்புகளிலும் அதிகப்படியான வலியை பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. முதலில், வைரஸ் காய்ச்சல் போல அறிகுறிகளை காட்டும் இந்தக் காய்ச்சல் பின்னர், எலும்புகளில் அதிக வலிகளை ஏற்படுத்துகிறது.
முதல் கட்டமாக குடும்பத்தில் ஒருவரை தாக்கும் இந்தக் காய்ச்சல் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் பிறரையும் நோய் பாதிப்புக்கு உட்படுத்துகிறது. இதனால் ஒரு குடும்பமே முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. குறிப்பாக, கோவையில் பால் கம்பெனி, லாலி ரோடு, மதுக்கரை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் அதிகப்படியான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல் கட்ட நடவடிக்கையை துவங்கியுள்ள மாநகராட்சி, மக்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மருத்துவ முகாமை அமைப்பதோடு, நோய் பரவாமல் இருப்பதற்கு தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மாநகர சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, முதல் கட்டமாக காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள், தாங்களாகவே சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் மருத்துவரை அணுகி, உடல் பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு ஆரம்பக்கட்டத்திலேயே இந்தக் காய்ச்சலை கட்டுப்படுத்திக்கொள்ள வலியுறுத்தினர். மேலும் இது எந்த வகையான காய்ச்சல் என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.