பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அதிகாலை 5.30 மணி அளவில் அயனாவரத்தில் இருந்து பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று மாலை வரை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னைக்கு உரித்தான கானப்பாடல்களை பாடி பொது மக்கள், ஆதரவாளர்கள் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த காலை சென்னைக்கு வரவுள்ளார்.
இதனால், பெரம்பூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவரது உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வது தொடர்பான அவசர வழக்கு இன்று காலை விசாரணை 8.30 மணி விசாரணைக்கு வருகிறது. இதனை நீதிபதி பவானி சுப்புராயன் விசாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை குறித்து நடிகர் தீனா பேசுகையில், “ எங்களின் மொத்த அதிகாரமும் போய்விட்டது. எங்கள் பூர்வக்குடி மக்களின் எழுச்சி நாயகன். இது மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எங்கள் அண்ணன் இருந்தவரையிலும் எங்களுக்கு எல்லாமே இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 100 வருடத்திற்கு பின்னால் சென்றது போன்று ஒரு ஐயம் வந்துவிட்டது.
நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் எங்களுக்கு ஜாதி என்பது கிடையாது. எங்களை பற்றி கூறுபவர்தான் எங்களை அவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள். நாங்கள் சாதி,மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து மனிதநேயம் என்ற ஒன்றைமட்டுமே மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்கிற மக்கள் நாங்கள். அவரும் இதுவரை யாரையும் ஜாதியாக பார்க்கவில்லை மதமாக பார்க்கவில்லை, இனமாக பார்க்கவில்லை, மனிதராக மட்டும்தான் பார்த்தார். மனித நேயத்தோடு மட்டும்தான் பார்த்தார்.” என்று தெரிவித்தார்.