தமிழ்நாடு

பாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து

பாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து

webteam

பாஸ்போர்ட் எடுக்க முதல் தகவல் அறிக்கை தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை பாஸ்போர்டு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பம் காவல்துறையின் சரிபார்ப்பிற்கு சென்றபோது பிரபாகரன் மீது கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது தெரியவந்தது. அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. 

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபாகரன் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எனினும் இவரது விளக்கத்தை ஏற்க மறுத்த பாஸ்போர்ட் அலுவலகத்தினர், இவருக்கு பாஸ்போர்ட் வழங்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரபாகரன் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கிற்கான மனுவில், “நான் சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே இது பாஸ்போர்ட் தருவதற்கு தடையில்லை” எனத் தெரிவித்தார். அதேபோல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையில்லை” எனத் தெரிவித்தார். மேலும் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறினார். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி கோவிந்தராஜ், “பாஸ்போர்ட் வழங்குவதற்கு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது தடையாக இருக்காது. ஆகவே பாஸ்போர்ட் அலுவலகம் பிரபாகரனின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் உரிய முடிவை வழங்கவேண்டும்” என உத்தரவிட்டார்.