அபராதம் விதிக்கும் ஓட்டுநர் pt web
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளை மடக்கிப் பிடித்து அபராதம்; பழிவாங்கும் நடவடிக்கையா?

PT WEB

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில், அரசுப் பேருந்துகளை மடக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை தலைமையிலான காவலர்கள் அபராதங்களை விதித்தனர். சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை அணியவில்லை என போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதேபோல உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை, ஒரு வழிப்பாதையாக மாற்றிய சாலையில், விதிகளை மீறி வந்த 5 அரசுப் பேருந்துகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால், அவ்வழியாக வந்த மற்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அறிவுரை வழங்கி அனுப்பினர்.

இதனிடையே, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே எல்லைக்கோட்டை தாண்டி நின்ற அரசுப் பேருந்தை ஓரமாக நிறுத்தச் சொன்னதால் ஓட்டுநர், போக்குவரத்து காவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக பூக்கடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக நாங்குநேரியில் இருந்து நெல்லைக்கு அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் டிக்கெட் எடுக்கக் கூறியதால், அவருக்கும் நடத்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காணொளி வெளியாகி சர்ச்சையான நிலையில், அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.