தமிழ்நாடு

மருத்துவருக்கு இதுதான் நிலையா?, கல்லால் அடிக்க வருவது சரியா?: சக மருத்துவர் வேதனை

மருத்துவருக்கு இதுதான் நிலையா?, கல்லால் அடிக்க வருவது சரியா?: சக மருத்துவர் வேதனை

jagadeesh

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தாக்கிய சம்பவம் சக மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களை கைவிடுமாறு மருத்துவர் பாக்யராஜ் கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களுக்காக பணியாற்றும் மருத்துவருக்கு இதுதான் நிலையா?, கல்லால் அடிக்க வருவது சரியா? என்று கேள்வி எழுப்பிய அவர் மருத்துவரின் ‌உடலை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை என்றும் உடலை சாலையிலேயே வைத்துவிட்டு ஓடிவந்தோம் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்காக சேவையாற்றும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து அவமரியாதை செய்வது மிகவும் வருத்தமளிக்கும் செயல் என மருத்துவர் அமலோற்பவநாதன் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன், “உயிரிழந்தவர்களிடமிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை. மக்கள் தேவையற்ற பீதி கொள்ள வேண்டாம். உயிரிழந்தவர்களின் உடலை தொடாத வரை தொற்று ஏற்படாது” என்று அவர் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் செயல் வருத்தமளிக்கும் விதமாக உள்ளதாகவும், மக்களை இவ்வாறு தூண்டி விடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அரசு மருத்துவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அறியாமையில் சிலர் தூண்டிவிடுவதே இது போன்ற செயல்களுக்கு காரணம். அரசும், ஊடகங்களும் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இறந்தவர் உடலில் இருந்து தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. எதிர்ப்பு தெரிவிக்க தூண்டி விடுபவர்களைக் கைது செய்ய வேண்டும். தவறாக தூண்டி விடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வரும் காலங்களில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.