முத்துராமலிங்கத் தேவர் pt web
தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி | பசும்பொன்‌ தேவர்‌ நினைவாலயம்‌ உருவானது எப்படி? சுவாரஸ்ய வரலாறு!

பசும்பொன்னில்‌ முத்துராமலிங்க தேவரின் உடல் அடக்கம்‌ செய்யப்பட்ட இடம்‌, ‘பசும்பொன்‌ தேவர்‌ சமாதி’ என்றே சொல்லப்பட்டு வந்தது. பின் இது ‘பசும்பொன்‌ தேவர்‌ நினைவிடம்‌’ ‘நினைவாலயம்‌’ என்றெல்லாம் மாறி தற்போது ‘திருக்கோவில்‌’ என்றழைக்கப்பட்டுகிறது

Angeshwar G

இராமநாதபுரம் ஆளுகைக்கு உட்பட்ட ஜமீன் குடும்பத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர். தந்தையார் பெயர் உக்கிரபாண்டியத் தேவர். தாயார் பெயர் இந்திராணி அம்மையார்.

தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

முத்துராமலிங்க தேவர் ஆறுமாத கால குழந்தையாக இருந்த போதே 29.04.1909 அன்று தனது தாயார் இந்திராணி அம்மையாரை இழந்தார். தனது சித்தியையும் சில காலத்தில் இழந்த முத்துராமலிங்கத் தேவர் தனது பாட்டியின் அரவணைப்பில் பசும்பொன்னிற்கு அருகில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் வளரத் துவங்கினார்.

1927 ஆம் ஆண்டில் தனது 19 ஆவது வயதில் பசும்பொன்னில் இருந்து சென்னை வந்த முத்துராமலிங்கத் தேவர், காங்கிரஸ் கட்சியில் முன்னணித் தலைவராக இருந்த சீனிவாச ஐயங்காரைச் சந்தித்தார். தொடர்ந்து காங்கிரஸ் பேரியக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். அதே ஆண்டில் டாக்டர் அன்சாரி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டார். இம்மாநாட்டில் பேசிய சீனிவாச ஐயங்கார் “இராமநாதபுரத்தின் இளம் சிங்கம்” என்று காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் இவரை அறிமுகப்படுத்தினார். அம்மாநாட்டில்தான் நேதாஜியை சந்திக்கிறார் முத்துராமலிங்கத் தேவர். முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது அந்த சந்திப்பு.

இதனைத் தொடர்ந்து தென் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அவர், ஆங்கிலேயருக்கு எதிராக மாபெரும் மக்கள் சக்தியை திரட்டினார். அவருக்கு பின் மக்கள் ஒன்று திரண்டனர். 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண பொதுத்தேர்தல் நடந்தது. அதன்மூலம் 1937 சட்டமன்ற உறுப்பினரான முத்துராமலிங்கத் தேவர், 1957 ஆம் ஆண்டுவரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957 முதல் 63 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஒரு சமயம் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தியின் ஆதரவு வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை எதிர்த்து நேதாஜி போட்டியிட்டார். 1937 மார்ச் 11 ஆம் தேதி திரிபுரவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி தலைவராக தேர்வானர். பட்டாபியின் தோல்வி என் தோல்வி என காந்தி அறிவிக்க, நேதாஜியோடு காங்கிரஸ் மிதவாத கொள்கையுடையோர் ஒத்துழைக்கவில்லை.

இதனை அடுத்து 1937 மே 1 ஆம் தேதி நேதாஜி தனது பதவியை ராஜினாமா செய்து அதே ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பார்வார்டு ப்ளாக் கட்சியை தொடங்கினார். இதில் தேவரும் இணைந்து செயல்படலானார். 1946 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டிலும் பர்வார்டு ப்ளக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1957 ஆம் ஆண்டில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றிருந்தார் முத்துராமலிங்கத் தேவர். இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின் வந்த இடைத்தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளரே வெற்றி பெற்றார்.

1957ல் நாடாளுமன்றம் சென்ற முத்துராமலிங்கத் தேவருக்கு 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதிதான் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பிப்ரவரி 17 ஆம் தேதிதான் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மாலை 4.45 மணிக்கு. 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும். ஆனாலும் அவர் பேசியது குறித்து மறுநாள் செய்தி வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லி பதிப்பு, ‘Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என கூறி சிறப்பித்திருந்தது.

மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதய்யர் அரிஜன மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல எண்ணினார். அப்போது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அரிஜனங்களோடு மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டும் என்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். இதனை அறிந்த தேவர், “வைத்தியநாதய்யர் அரிஜனங்களை அழைத்து வரும் போது நானும் வருவேன். அசம்பாவிதம் நடந்தால் ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்.

1939 ஜூலை 8 ஆம் தேதி நடந்த ஆலய பிரவேசத்தின் போது வைத்தியநாதய்யருடன் தேவரும் உடன் சென்றார். எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகள் அந்தப் பக்கம் வரவே இல்லை. மக்கள் மகிழ்ச்சியுடன் கடவுளை வழிபட்டனர்.

முத்துராமலிங்கத் தேவருடன் 21 முறை சிறை சென்றவரான ராஜாத் தேவர், தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு சிறப்பு மலர்’ நூலில் கூறியுள்ளதாவது, “பணத்தை கையால்‌ தொடுவதில்லை என்றும்‌, தனக்கு சொந்தமான 32 கிராம வருவாயையும்‌ ஏழை, எளிய மக்களுக்கு, வழங்கி வந்தார்‌. இது அவருடைய ஈகை குணத்திற்கு எடுத்துக்காட்டாகும்‌. தேவர்‌ பிறந்து ஆறு மாதமாக இருக்கும்‌ போது அவரின்‌ தாயார்‌ இந்திராணி அம்மையார்‌ இறந்து விட்டார்‌. அப்பொழுது முதல்‌ அவருக்கு ஒரு இஸ்லாமியத்‌ தாய்‌ பால்‌ ஊட்டி வளர்த்தார்‌. அந்தத்‌ தாய்க்கு தேவர்‌ 12 மூட்டை நெல்லும்‌ ஆண்டுக்கு 6 சேலைகளும்‌ வழங்கினார்‌. தேவர்‌ அரிசி கழுவிய தண்ணீரை 1 படி காலையில்‌ குடிப்பார்‌. மதியம்‌ சாப்பாடு, இரவு பால்‌ பழம்‌ போன்றவற்றை அருந்துவார்‌. அவர்‌ சாப்பிடும்‌ போது குறைந்தது 50 பேருக்கு உணவு பரிமாறினால்‌தான்‌ அவர்‌ அமர்ந்து உண்பார்‌” என குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் பல்வேறு வகைகளில் போற்றப்படும் முத்துராமலிங்கத் தேவர், மக்களுக்காக தனது இறுதி நாள் வரை குரல் கொடுத்தவர். 1908 அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்த முத்துராமலிங்கத் தேவர் 1963 அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். மொத்தம் 20,088 நாட்கள். இதில் ஏறத்தாழ 4000 நாட்களை சிறையில் கழித்தவர்.

கமுதியைச் சேர்ந்த செய்தியாளர் திராவிட மணி தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு சிறப்பு மலர்’ நூலில், “பசும்பொன்னில்‌ தேவரின்‌ திருவுடல்‌ அடக்கம்‌ செய்யப்பட்ட இடம்‌, ‘பசும்பொன்‌ தேவர்‌ சமாதி’ என்று ஆரம்ப கால கட்டத்தில்‌ சொல்லப்பட்டு வந்தது.

பின்னர்‌ இச்சொல்‌ ‘பசும்பொன்‌ தேவர்‌ நினைவிடம்‌’ என்று மாறியது. அதன்பின்‌ ‘பசும்பொன்‌ தேவர்‌ நினைவாலயம்‌’ என்றும்‌, தற்போது ‘பசும்பொன்‌ தேவர்‌ திருக்கோவில்‌’ என்றும்‌ அழைக்கப்பட்டு வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

தகவல் உதவி: தமிழக அரசு வெளியிட்ட ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு சிறப்பு மலர்’