தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி பூசலால் குருபூஜைக்கு கவசம் கொண்டு வருவதில் சிக்கல்

அதிமுக உட்கட்சி பூசலால் குருபூஜைக்கு கவசம் கொண்டு வருவதில் சிக்கல்

webteam

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியிலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசம் ஓரிரு நாளில் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக கவசம் வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

2014 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ தங்க கிரீடம் மற்றும் கவசத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அவை மதுரையிலுள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கிரீடம் மற்றும் கவசத்தை ஆண்டுதோறும், தேவர் குருபூஜை விழாவின் போது எடுத்துச் சென்று அணிவிக்கும் பொறுப்பு அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடமும்  நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

இந்தாண்டு தங்க கவசத்தை ஒப்படைக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் வங்கி சார்பில் சில விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. அதனால், கவசத்தை குருபூஜை விழாவிற்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது‌‌. இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு விரைந்து தங்க கவசத்தை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

‌இதுகுறித்து பசும்பொன் மக்கள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ஆம் தேதி கவசம் பசும்பொன் வந்து சேருவது வழக்கம் ஆனால் அதிமுகவின் உட்கட்சி பூசல் காரணமாக கவசம் வருவதில் சிக்கல் நீடிக்கிறது என்று கூறினர். தங்கக் கவசத்தை எடுப்பதற்கு அதிமுகவின் பொருளாளர் எனும் முறையில் யார் கையெழுத்திடுவது, ஓ.பன்னீர்செல்வமா? திண்டுக்கள் சீனிவாசனா? அல்லது டிடிவி தினகரனா? தற்போது நியமிக்கப்பட்டுள்ள ரங்கசாமியா? என்ற குழப்பம்தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று அவர்கள் கூறினர்.