Passengers pt desk
தமிழ்நாடு

இது பஸ்ஸா இல்ல ஃபால்ஸா! அரசு பேருந்துக்குள் அருவியாய் கொட்டிய மழைநீர் - கோவையில் பயணிகள் அவதி!

Kaleel Rahman

கோவை மாவட்டம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை கோவை புறநகர பகுதிகளான அன்னூர், பொகலூர், தாளத்துறை, தேரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாக பரவலாக கனமழை பெய்தது.

இதன் காரணமாக அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுக்கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் உள்ளே மழைநீர் ஷவர் போல கொட்டியது. இதனால் பேருந்தில் பயணித்த பலர் பாதியிலேயே இறங்கி மாற்றுப் பேருந்தை நாடும் நிலை ஏற்பட்டது. இருக்கைகளில் நீர் வழிந்ததால் பயணிகள் நின்றபடியே பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த பயணிகள் சிலர், பேருந்துக்குள் மழைநீர் வடிந்ததை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளை பழுதடைந்த பேருந்துகளை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.