செய்தியாளர்கள்: சாந்த குமார், உதயகுமார்
சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலைய யார்டு பணிகளுக்காக ரயில் சேவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது, இந்நிலையில், கடந்த 14ம் தேதி வரை இருந்த ரயில் சேவை ரத்து மற்றும் மாற்றம், வரும் 18ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு மேல் மதியம் வரை ரயில் சேவை இருக்காது என்பதால் வேலைக்குச் செல்பவர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து அங்கு காத்திருக்கும் பயணிகள் ரயில் வந்த உடன் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் பலர் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்கவும் செய்தனர்.
இன்னொருபக்கம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. முன்னறிவிப்பின்றி கூடுவாஞ்சேரியில் ஒருமணி நேரம் வரை இரயில் நிறுத்தப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் புறநகர் ரயில் சேவை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதில் குறிப்பாக செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்படுவதாகவும், சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் இப்பிரச்சனையால் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் அருகே நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடித்து புறநகர் மின்சார ரயில் சேவையை வழக்கம் போல இயக்கிட வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.