செய்தியாளர்: ந.காதர் உசேன்
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில், இன்றும் காலை மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. வழியில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாந்த பிள்ளைகேட் பகுதியில் ரயில் வந்தபோது, திடீரென அதன் இன்ஜின் கேபிள் பழுதானது. இதனால் ரயில் அங்கேயே நின்றது. ரயில் ஓட்டுநர் அதனை சரி செய்ய முயன்றும் முடியாததால் நடுவழியிலேயே ரயில் நின்றது.
இதனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என ரயிலில் இருந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் செய்வதறியாது தவித்தனர். இதையடுத்து தஞ்சையில் இறங்க வேண்டிய பயணிகள் தண்டவாளத்தில் நடந்தே சென்றனர். அப்போது நாகூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் சிலர் ஏறிச் சென்றனர். இதற்கிடையே ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இன்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டது. 1 மணி நேர கால தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இன்ஜின் பழுது காரணமாக ரயில் நடுவழியில் நின்றதால் அதை தொடர்ந்து வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.