தமிழ்நாடு

காஞ்சிபுரம்: மின்கம்பத்தில் பிணைந்துள்ள கட்சிக்கொடி- என்னவானது சிறுவன் உயிரிழப்பின் பாடம்?

Sinekadhara

விழுப்புரத்தில் கட்சிக்கொடி பதின்மூன்று வயது சிறுவனின் உயிரைக் குடித்தநிலையில், தற்போது காஞ்சிபுரத்திலும் கட்சி விழா ஒன்றிற்காக கட்சிக் கொடி  மின்சார கம்பத்தில் பின்னி கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கொடி நடும்பொழுது கட்சிக்கொடியின் மேற்பகுதி மின்சார வயரில் உரசியதால் 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கட்சிக் கொடியினால் 13 வயது சிறுவன் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் காஞ்சிபுரத்தில் கட்சி உறுப்பினர் ஒருவரின் திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர்கள் வருவதையொட்டி அவர்களை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கக்கூடிய காவலன் கேட் பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவில் சாலையின் ஒரு பகுதியில் எந்த அனுமதியும் இல்லாமல் கட்சிக்கொடி நடப்பட்டுள்ளது.

இந்த கட்சிக்கொடிகளின் மேற்பகுதி மின்சார வயரில் பின்னிக் கொண்டிருக்கின்றன. மேலும் காஞ்சிபுரத்தில் மழை வருவதற்கான சூழ்நிலை அதிகம் உள்ளது. இந்நிலையில் மின்சார கம்பியில் பின்னிக் கொண்டிருக்கும் கட்சிக்கொடியினால் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை கட்சிக்கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் லட்சுமியை தொடர்புகொண்டு கேட்கும்போது உடனடியாக கட்சிக்கொடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.