தமிழ்நாடு

பார்க்கிங் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த ஏராளமான பொறியியல் பட்டதாரிகள்..!

பார்க்கிங் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த ஏராளமான பொறியியல் பட்டதாரிகள்..!

webteam

சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த வாகன நிறுத்துமிட உதவியாளர் வேலைக்கு எண்ணற்ற பொறியாளர்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் பகுதிகளில் 2000 புதிய வாகன நிறுத்துமிட வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் இரண்டாவது நிழல் சாலையில் மட்டும் சுமார் 550 வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வரும் திங்கட்கிழமையில் இருந்து உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை நிர்வகிக்க உதவியாளர்கள் தேவை என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கு எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வேலைக்கு 1,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 70 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் எனவும் 50 சதவீதம் பேர் பொறியாளர் படிப்பு முடித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது வேலைவாய்ப்பு இல்லாததை காட்டுகிறது என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாகன நிறுத்துமிட உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பலர் பொறியியல் துறையில் முதுகலை முடித்துள்ளனர். பார்க்கிங் நிர்வாகத்தின் டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதற்கு இவர்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம். பார்க்கிங் உதவியாளர்களுக்கான உண்மையான தகுதி எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே” எனத் தெரிவித்தார்.