போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சத்துணவு அமைப்பாளருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இடைநிலை ஆசிரியர் சரவணனை வகுப்பறைக்குள் புகுந்து மக்கள் தாக்கிய சம்பவம் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே, பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் சரவணன் பாலியல் தொல்லை தந்ததாக அளித்த புகாரில் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் சரவணன் கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம்செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர். போக்சோவில் வழக்குப் பதியப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு மாற்றாமல் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.