துபாய் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்யும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி அருகே உள்ள மிடாப்பாடி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அரவிந்த். இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த ஜான் என்ற ஏஜென்ட் மூலம் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் துபாய் ஷார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 14 மாதங்களில் சரியாக சம்பளம் வழங்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதோடு கொத்தடிமை போல நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அரவிந்த் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரவிந்தின் தந்தை நாகராஜ் தனது மனைவியுடன் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் துபாயில் கொத்தடிமையாக பணிபுரியும் தனது மகனை மீட்டு தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்து இருப்பதாகவும் தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.