தமிழ்நாடு

ஓராண்டுகள் ஆகியும் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

ஓராண்டுகள் ஆகியும் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

Sinekadhara

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது மரணம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், ஹேம்நாத் தான் தங்களது மகளைக் கொலைசெய்ததாக சித்ராவின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டி, மறு விசாரணை கோருகின்றனர்.

முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாக பெற்றோர் பேட்டி சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மரணத்தில் ஐயம் இருப்பதாக அப்போதே சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்ட, தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், ஹேம்நாத் பிணையில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும், தமது உயிருக்கு ஆபத்து எனவும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சித்ராவின் தாயார் விஜயா மற்றும் தந்தை காமராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். சித்ரா உயிரிழந்த ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், அவர் மீது ஹேம்நாத் அவதூறு பரப்புவதாகவும், வழக்கை திசை திருப்பி தப்பிக்க தவறான தகவல்களை ஹேம்நாத் பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினர். சித்ராவின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளதாகவும், ஹேம்நாத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

சித்ராவின் மரணம் தொடர்பாக கடந்த ஆட்சியில் உரிய முறையில் காவல்துறை விசாரணை நடத்தவில்லை என்றும், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாகவும் சித்ராவின் பெற்றோர் தெரிவித்தனர்.