தமிழ்நாடு

கொத்து கொத்தாக நாய்களை அடித்துக்கொன்ற நகராட்சி ஊழியர்கள் - பரமக்குடியில் பயங்கரம்

கொத்து கொத்தாக நாய்களை அடித்துக்கொன்ற நகராட்சி ஊழியர்கள் - பரமக்குடியில் பயங்கரம்

webteam

பரமக்குடியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்று குப்பையில் வீசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி நகராட்சியில் குப்பை அள்ள பயன்படுத்தும் வாகனங்களில், நான்கு கால்களும் வாயும் கட்டப்பட்ட நிலையில் ஏராளமான நாய்களை கொண்டு சென்றதை சிலர் பார்த்துள்ளனர். நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்டும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவற்றில் 4 நாய்கள் உயிரிழந்திருந்தன.

இதனையடுத்து கடுமையாக தாக்கப்பட்டதால் தான் அந்த நாய்கள் உயிரிழந்தது தெரியவந்தது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை செய்வது மட்டுமே நகராட்சியினரின் வேலையாக உள்ள நிலையில், நாய்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் அடித்துக்கொல்லப்பட்டது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பினர் ராமநாதபுரம் காவல்துறை எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், “தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டபோது, மூன்று குழந்தைகளை நாய்கள் கடித்து விட்டது. அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தனர். தற்போது நாய்களை அடித்து கொன்றதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து உரிய விசாரணை நடத்தி ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்