தமிழ்நாடு

பாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை 

பாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை சம்பவம் - காட்டிக் கொடுத்த பரிகார பூஜை 

webteam

நெல்லை மாவட்டம் சிவகிரியில், பாபநாசம் திரைப்பட பாணியில் ஒருவர் உயிரிழந்ததை குடும்பமே சேர்ந்து மறைத்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நெல்லை மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த மன்னார் என்பவர் கடந்த 2012ஆம் ஆ‌ண்டு ஜனவரி 7ஆம் தேதி காணாமல் போனார். தனது உறவினர் கந்தனின் வயலுக்கு தண்ணீர்‌ பாய்ச்சுவதற்காக சென்ற மன்னாரை காணவில்லை என அவரது மனைவி மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்தாண்டு மேரி ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் மன்னார் மாயமான வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. 

டி.எஸ்.பி. அனில்குமார் மற்றும் ஆய்வாளர் உலகராணி ஆகியோர் அடங்கிய குழு புலன் விசாரணையை தொடங்கியது. மாயமான மன்னாருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் வயலுக்கு சென்றதை ஊரில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து திரும்பி வந்ததாக எந்தத் தகவலும் இல்லை. அப்படியென்றால் வயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில்தான் மன்னாருக்கு‌ ஏதோ நடந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது சிபிசிஐடி. 

எனவே அவர் சென்ற வயலிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களிலோ கடந்த சில ஆண்டுகளில் ஏதேனும் இயல்புக்கு மாறான விஷயங்கள் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கந்தன் வயலை சுற்றியுள்ள இடங்களுக்கு வேலைக்குச் செல்வோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 

கடந்த சில ஆண்டுகளாக கந்தன் வயலுக்கு அருகேயுள்ள கரும்புத் தோட்டத்தில் ஜனவரி 7ஆம் தேதி சிறப்பு பூஜை நடப்பது சிபிசிஐடி-க்கு தெரியவந்தது. மன்னார் மாயமானதும் ஜனவரி 7ஆம் தேதி என்பது காவல்துறையினரின் கண்களில் பளிச்சிட்டது. வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணிய காவல்துறை கரும்புத்தோட்டத்துக்கு உரியவர்களிடம் விசாரணை நடத்தியது. அதன் மூலம் மன்னார் மாயமானதில் இருந்த மர்மம் வெளிவந்தது. 

அந்தக் கரும்பு தோட்டம் பன்னீர் என்பவருக்கு சொந்தமானது. வனவிலங்குகள் தோட்டத்துக்குள் நுழைவதை தடுக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார் பன்னீர். மின் கம்பியில் இருந்து மின்சாரத்தை திருடி வேலியுடன் இணைத்திருந்தார். இதை அறியாமல் இரவு நேரத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த மன்னார் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். மன்னாரின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர் மற்றும் குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி மன்னார் உயிரிழந்தது வெளியில் தெரிந்தால் தண்டனை நிச்சயம் என்பதை எண்ணி அவர்கள் அச்சமடைந்தனர். அதிலிருந்து தப்ப முடிவு செய்த பன்னீர், அவரது மனைவி பாப்பா மற்றும் மருமகன் பாலகுரு ஆகியோர் தங்களது கரும்புத் தோட்டத்திலேயே மன்னாரின் உடலை புதைத்து விட்டனர். அதன்பின் தங்களுக்கு ஏதும் தெரியாதது போல் இருந்துவிட்டனர். 

ஆனால் தனது வயலில் மன்னார் உயிரிழந்ததையும் அவரது உடலை அங்கு புதைத்ததையும் எண்ணி பன்னீர் மன உளைச்சலில் இருந்துள்ளார். மன்னார் உயிரிழந்த பாவம் தங்களை தாக்காமல் இருக்க ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் தேதி பரிகார பூஜை செய்துள்ளார். எனினும் மன உளைச்சல் விட்டபாடில்லை. அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார் பன்னீர்.

மன்னார் மாயமான வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை கண்டறிந்த சிபிசிஐடி பன்னீரின் மனைவி பாப்பா மற்றும் அவரது மருமகன் பாலகுரு ‌ஆகியோரை கைது செய்தது. தனக்கும் தனது குடும்பத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என பன்னீர் செய்த பூஜையே அவரது தவறை காட்டிக் கொடுத்துவிட்டது.