தமிழ்நாடு

7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம்

webteam

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசு தலைவருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. 

அதனைத்தொடர்ந்து 2018 ஏப்ரல் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி என குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் பரி‌ந்துரை கடிதத்திற்கு பதில் அனுப்பியது.

அதில், முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னு‌தாரணம் ஆகிவிடும் என்பதால், பரிந்துரை கடிதத்தை நிராகரிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தண்டனைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எதன் அடிப்படையில் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். 

அதற்கு 7 பேரின் விடுதலை தொடர்பாக தங்களு‌க்கு பரிந்துரை கடிதம் எதுவும் வரவில்லை என குடியரசு தலைவர் மாளிகை பதில் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெரியகுளத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.