தமிழ்நாடு

திருச்சி: கிராம மக்களுக்கு தீபாவளி கிப்ட் வழங்கி அசத்திய ஊராட்சிமன்ற தலைவர்

திருச்சி: கிராம மக்களுக்கு தீபாவளி கிப்ட் வழங்கி அசத்திய ஊராட்சிமன்ற தலைவர்

Sinekadhara

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கு சொந்த செலவில் புத்தாடை இனிப்பு வழங்கி அசத்தியுள்ளார் திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர். 

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் போதாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மலர்கொடி. இவருடைய கணவர் முத்தையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இருவரும் சேர்ந்து தங்களுடைய சொந்த செலவில் கிராம மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி மகிழ்வித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போதாவூரில் வசிக்கும் 1000 குடும்பங்களுக்கு பிளாஸ்டிக் வாளி, தேங்காய், வாழைப்பழம், லட்டு மற்றும் முதியவர்களுக்கு வேட்டி, சேலை, இளைஞர்களுக்கு புத்தாடை என சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

கொரோனா காரணமாக மக்கள் வருமானம் இழந்து தவிக்கும் நிலையில், தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னால் இயன்ற பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கி மக்களுக்கு கொடுத்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடி முத்தையா தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.