தமிழ்நாடு

ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை: வீடு வீடாக விநியோகம் செய்த ஊராட்சிமன்றத் தலைவர்!

ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை: வீடு வீடாக விநியோகம் செய்த ஊராட்சிமன்றத் தலைவர்!

webteam

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் 1957-ம் ஆண்டு முதல் 1986 வரை சுழற்சி முறையில் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 1986-ல் நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர், வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சுழற்சி முறையில் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், கடந்த முறை கடுமையான போட்டி நிலவியது. இதில் பட்டதாரி இளைஞர் சுப்புராமன் வெற்றிபெற்றார். பதவியேற்ற பிறகு கட்டிட பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் என சுறுசுறுப்பாக இயங்கிய சுப்புராமன் தற்போது வரவு செலவு கணக்கை வெளிப்படையாக ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளார்

கடந்த 9 மாத வரவுசெலவு கணக்கை நோட்டீசாக அடித்து வீடு வீடாக விநியோகம் செய்துள்ளார் இளம் ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புராமன். வரி வசூல் எவ்வளவு?, மொத்த வரவு என்ன? இதுவரை செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? கையிருப்பு என்ன? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய தெளிவான விளக்கம் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புராமன், ஊராட்சியில் நடக்கும் வரவு செலவு கணக்குகளை ஊர் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் ஊராட்சி நிலவரங்கள் அவர்களுக்குப் புரியவரும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை போட்டியின்றி ஊராட்சிமன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்றும், ஆனால் இப்போது ஊராட்சி மன்றத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரவுசெலவு கணக்குகளை தெரிவிப்பதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக புரிதல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.