100 நாள் வேலை திட்டம் முகநூல்
தமிழ்நாடு

100 நாள் வேலைத் திட்டம் | ”கொள்ளையடிப்பது, ஊழல் செய்வதுமே ஊராட்சித் தலைவர்களின் நோக்கம்!” - நீதிபதி

100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சித் தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.

PT WEB

100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சித் தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், குறிகாரன் வலசை, கீழ்பாகம் சுற்றுவட்டார பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்பணியின் பொறுப்பாளர் அமுதா, கிராமத்தில் இல்லாதவர்கள், வடமாநிலத்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை இணைத்து மோசடி செய்து வருவதாகவும், இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கொள்ளையடிப்பதையும், ஊழல் செய்வதையுமே ஊராட்சித் தலைவர்கள் நோக்கமாக கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கரூர் ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.