நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் மின் இணைப்பு இல்லாத ஏழைக் குடும்பத்திற்கு அக்கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரே சோலார் அமைத்துக் கொடுத்துள்ளார்.
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். தச்சுவேலை செய்து வந்த இவர் தனது மகன் முருகையன் குடும்பத்துடன் வசித்து வந்தார். முருகையனுக்கு கோமதி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
5 வருடங்களுக்கு முன்பு முருகையன் இறந்துவிட மகனின் குடும்பத்திற்கு பழனிவேல் உதவியாக இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழனிவேலும் காணாமல் போனார். இதனால் பழனிவேல் மனைவியும், கோமதி மற்றும் அவரது இரண்டு மகள்கள் மட்டுமே வீட்டில் தனியாக இருந்து வருகின்றனர். கோமதியின் வீடு தனியாக இருப்பதால் அங்கு சாலை, குடிநீர், மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் அடிப்படை வசதி ஏதும் இன்றி இரண்டு பெண் குழந்தைகளுடன் கோமதி அவதிப்பெற்று வந்தார். இந்நிலையில் கருப்பம்புலம் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்புராமன் தன் சொந்த செலவில் சோலார் அமைத்து வீட்டிற்கு ஒளி ஏற்றியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன், ''வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்களின் நிலை அறிந்தோம். நிச்சயம் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். ஆனால் அந்தப்பகுதியில் வீடு தனியாக இருப்பதால் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் சொந்த செலவில் சோலார் பேட்டரி அமைத்து மின்சாரம் கொடுத்துள்ளேன். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு அரசு வீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் பிரச்னைகள் களையப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தனியாக வீட்டில் இருளில் பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த எங்களுக்கு ஒளி ஏற்றியுள்ள ஊராட்சி மன்றத் தலைவவருக்கு நன்றி தெரிவிப்பதாக கோமதி தெரிவித்துள்ளார்