Govt school students pt desk
தமிழ்நாடு

“நாங்களும் ஸ்கூல் பஸ்ல போவோம்ல” – அரசுப்பள்ளி மாணவர்களுக்காக ஊராட்சி மன்றத் தலைவி எடுத்த முடிவு!

திருப்பூர் மாவட்டம் படியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளை வீட்டில் இருந்து அழைத்து வர அரசுப் பள்ளிக்கென தனி பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரத்யேக பேருந்து சேவையால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்;

திருப்பூர் மாவட்டம் படியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் அருகே உள்ள துவக்கப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

படியூர் பகுதியில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் உதவியுடனும், சிலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவிகள் மாலை வேலைகளில் தனியாக கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது.

School students

இந்த பள்ளி வழியாக ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படும் நிலையில், குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவதும், வீட்டுக்கு செல்வதும் இயலாமல் மாணவ மாணவிகள் தவித்து வந்தனர். கூடுதல் பேருந்து கோரி தொடர் மனுக்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தனது சொந்த நிதியில் இருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து ஒன்றை பள்ளிக்கென பிரத்தியேகமாக வழங்கி இருக்கிறார்.

படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் இதுபற்றி கூறுகையில், “இதன் மூலம் கிராமப் புறங்களில் இருந்து பள்ளிக்கு படிக்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாலை வேலைகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் மாணவிகள் தைரியமாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியும் என்பதால் அவர்களுடைய கல்வி பாதிப்படையாது” என மகிழ்வுடன் தெரிவித்தார்.

Govt school bus

இந்த பேருந்தில், ஜிபிஎஸ், கேமரா, வேக கட்டுப்பாட்டு கருவி என பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றி பேருந்து வசதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஓட்டுனர் மற்றும் மாணவர்களை ஏற்றி இறக்க உதவியாளர் என அனைத்து பராமரிப்பையும் ஊராட்சித் தலைவரே ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

அதே சமயம் “தனியார் பள்ளி மாணவர்கள் செல்லும் போதெல்லாம் ஏக்கத்துடன் பார்த்த எங்களுக்கும் எங்கள் பள்ளி சார்பில் பேருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் அரசு பேருந்தில் இடிபாடுகளுக்கு இடையே பயணித்தும், நடந்தும் பள்ளிக்கு வர சிரமப்பட்ட காலம் மாறி இருக்கிறது” பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.

students

இதனால் கல்வி இடைநிற்றல் இல்லாமல், கிராமப்புற மாணவர்கள் கல்வியை தொடர வழி கிடைத்துள்ளது. இத்திட்டத்தை அரசு முன்வந்து கிராமபுற மேல்நிலைப் பள்ளிகளுக்கு கொண்டு வந்தால் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி பயிலும் நேரம் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்