தமிழ்நாடு

பாம்பனில் புதிய ரயில் பாலம் : பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்

webteam

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளன.

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கடல் மீது 2.5 கி.மீ தூரத்திற்கான ரயில் பாலம், கடந்த 105 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தூக்குப் பாலம் கடந்‌த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வலுவிழந்ததையடுத்து 83 நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாம்பனில் புதிய பாலம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து, இன்று பாம்பன் ரயில்பாலம் அருகே பூமி பூஜையுடன் பாலப்பணிகள் தொடங்கப்பட்டன. 

இப்பாலத்திற்காக ரயில்வே துறை சார்பில் 246 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் கடல் சீற்ற காலங்களிலும் பாலத்தின் கட்டுமானப்பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படும் என்று கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் பாம்பன் ரயில் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.