பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் நடந்தேறிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்...
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்றாது, அந்நிலத்தை சிதைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காது அலட்சியப்போக்கினை வெளிப்படுத்தும் தமிழக அரசின் செயல் பெரும் ஏமாற்றமளிக்கிறது. நீராதாரத்தைத் தேக்கி வைப்பதில் பெரும்பங்காற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வருவதும், அதனை ஆளும் வர்க்கம் தடுக்கத் தவறுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னையின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மிக முக்கியமான ஒன்றாகும். 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது தொடர் ஆக்கிரமிப்புகளின் காரணமாக தற்போது வெறும் 500 ஹெக்டேராக சுருங்கிக் காணப்படுகிறது. இச்சதுப்பு நிலமானது கடலுக்கு அருகில் இருப்பதால் கடல் நீரையும், கடல் பொங்கி வரும் நேரத்தில் உள்வரும் நீரையும் நிலத்தின் அடியில் தேக்கி வைக்கும் தன்மை கொண்டது.
மேலும், இது ஒரு சிறந்த நன்னீர் வடிகட்டியாகவும் திகழ்கிறது. மிகுந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வமைப்பானது தொடர்ந்து நடைபெறும் கட்டிட ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகள் அப்பகுதியில் கொட்டப்படுவதாலும், இதனை சரிசெய்யவேண்டிய அரசாங்கத்தின் கவனக்குறைவாலும் அலட்சியப்போக்கினாலும் சீரழிந்து வருகிறது.
இப்படி அரசின் உடமையான இயற்கை அமைப்பு தொடர்ந்து மடைமாற்றப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2004ஆம் ஆண்டில் பூமிபாலா எனும் அறக்கட்டளை பெயருக்கு ஏறத்தாழ 66 ஏக்கர் சதுப்புநிலப்பகுதி பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை கிராமம் சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வந்தாலும் அப்போதைய ராயபுரம் பதிவாளராக இருந்த அங்கயற்கண்ணி என்பவர் மேற்சொன்ன நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமான சதுப்புநிலப்பகுதி என்று தெரிந்தும் விதிகளுக்குப் புறம்பாக ராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இப்படி முறைகேடாக அரசு நிலம் பதிவுசெய்யப்பட்டது பின்னாட்களில், தெரியவந்து புகார் அளிக்கப்பட்ட பின்னும் கூட வழக்கில் அங்கயற்கண்ணி அவர்களது பெயர் சேர்க்கப்படவில்லை. அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல, அதே 2004ஆம் ஆண்டில் தாம்பரம் துணைப்பதிவாளர் கீதா என்பவரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பதிவு செய்து விற்க வழிவகை செய்துள்ளது தெரியவருகிறது.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல சர்வே எண்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சர்வே எண்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும், 2010ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்ட சர்வே எண்களின் கீழ் பல பதிவுகளை செய்துள்ளனர். இதற்கு சைதாப்பேட்டை இணை பதிவாளர் ரவீந்திரநாத் என்பவரே உடந்தையாக இருந்துள்ளார்.
பதிவேட்டில், 'புறம்போக்கு' என இருந்தும்கூட நிலங்களை பதிவு செய்த இவர் மீது இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இல்லாத சர்வே எண்ணில் பத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை 2013-14 காலக்கட்டத்தில் பதிவு செய்த அப்போதைய சைதாப்பேட்டை துணை பதிவாளர் ரகுமூர்த்தி என்பவர் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2014ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விளைவாக 2021 செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு இதில் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உத்தரவிடப்பட்டது.
இப்படி மேற்சொன்ன அதிகாரிகள் மட்டுமின்றி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடந்த முறைகேடு குறித்த மொத்த புகாரையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்துள்ளது தெரியவருகிறது. இருப்பினும்கூட, இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், மாறாக அவர்களுக்குப பதவி உயர்வும் முக்கியமான பொறுப்புகளும் கொடுக்கப்படுவது ஜனநாயக துரோகமாகும்.
எனவே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டுருவாக்குவதில் முதன்மை கவனமெடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளை மீட்டெடுத்து, இனி எந்தவித ஆக்கிரமிப்பும் நடைபெறாதவாறு தடுக்க வேண்டுமெனவும், இதுவரை நடைபெற்ற மோசடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.