தமிழ்நாடு

மிரள வைத்த பல்லாவர கொள்ளை சம்பவம்... சதித் திட்டம் தீட்டிய மகாராணி கைது..!

webteam

வேலை செய்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் வகுத்துக் கொடுத்த வேலைக்காரப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய பல்லாவரத்தில் உள்ள கார்டன் உட்ரோப் நகரில் வசித்து வருபவர் யோகசேரன். தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணி புரிந்து வருகிறார். யோகசேரனின் இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென புகுந்த கொள்ளையர்கள் 5 பேர், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், வேலைக்காரப் பெண் மகாராணி என்பவரையும் கட்டிப் போட்டு, கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள், அவர்கள் அணிந்திருந்த 27 சவரன் நகைகள் என 227 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. கொள்ளை சம்பவத்தில் முக்கிய திருப்பமாக யோகசேரனின் வீட்டு வேலைக்காரப் பெண் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணையின் இறுதியில் அவர் தான் யோகசேரனின் வீட்டில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மகாராணி வீட்டு வேலைகளை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு யோகசேரனின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் பணமும் நகையும் இருப்பதைக் அறிந்து கொண்ட மகாராணி, வில்லத்தனமாக சதித் திட்டம் போட்டுள்ளார்.

யோகசேரனின் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக மதுரையில் 5 பேரை அழைத்து வந்து, சென்னையில் வாடைகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து, சரியான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். யோகசேரன் 2 உயர்ரக நாய்களை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார். கொள்ளை சம்பவத்திற்கு 2 நாய்களும் இடையூறாக இருக்கும் என எண்ணிய மகாராணி, ஒன்றன் பின் ஒன்றாக 2 நாய்களையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளார். பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்தபின், மகாராணி கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கொள்ளையர்கள் நகைகளை எடுத்துக் கொண்டு மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவானது தெரியவந்த நிலையில், அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். தெளிவாக திட்டம் தீட்டி, கொள்ளையடிக்க வழி வகுத்துக் கொடுத்துவிட்டு, பின் ஒன்றும் தெரியாது போல் நடித்த வேலைக்காரப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.