Police pt desk
தமிழ்நாடு

பல்லடம்: உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - ஆடியோ வெளியான நிலையில் காவலர் சஸ்பெண்ட்

பல்லடத்தில் உணவக உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக வெளியான ஆடியோ அடிப்படையில் இரண்டாம் நிலை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்

webteam

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் போலீஸார் ஒருவர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், “காரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறேன். சுபீன் என்ற காவலர் தினமும் 5 பேருடன் வந்த ரூ.2 ஆயிரத்துக்கு மேல் உணவு அருந்திவிட்டு பணம் தராமல் செல்வதுடன், பணம் கேட்டும் மிரட்டுகிறார்.

Police station

ஏற்கெனவே பணம் வழங்கிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார். அப்போது, என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். அதற்கு மதுபானம் விற்பதாக பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுகிறார். இதனால், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். மேலும், எனக்கு ஏதும் நேர்ந்தால் காவலர் சுபீனே காரணம்” என்று உணவக உரிமையாளர் பேசியிருந்தார்.

இதையடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர் சுபீனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உத்தரவிட்டதோடு உரிய விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.