திருநெல்வேலி மைய நூலகம் Twitter
தமிழ்நாடு

தலைமுறைகள் கடந்து 70 வருடங்களாக இயங்கி வரும் நெல்லை மாவட்ட நூலகம்! போதிய வசதிகள் இல்லாத அவல நிலை!

70 ஆண்டுகளாக பல்வேறு தலைமுறையினரை கடந்து வரும் நெல்லை பாளையங்கோட்டை மைய நூலகமானது வளர்ச்சியில்லாமல் அப்படியே இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

PT WEB

நெல்லை மாவட்டத்தில் அரசு நூலகங்கள் தென்காசி மாவட்டத்தையும் இணைத்து 202 என்ற எண்ணிக்கையில் உள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் மாநகரத்தின் மையப் பகுதியான பாளையங்கோட்டையில் மாவட்ட மைய நூலகம் கடந்த 1952 முதல் இயங்கி வருகிறது. 70 ஆண்டுகளாக சேர்த்து வைத்த புத்தகங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொடுகிறது. நாள்தோறும் இந்த நூலகத்தை 300க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அரசு தேர்வுக்கு படிப்பதற்காக இந்த நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வு புத்தகங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 8 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வரை இந்த மைய நூலகம் எப்போதும் பரபரப்பாகவே இயங்கி வருகிறது.

திருநெல்வேலி மைய நூலகம்

70 ஆண்டுகளாக பல்வேறு தலைமுறையினரை கடந்து வரும் இந்த நூலகம், இன்னும் அடுத்த கட்டத்துக்கு வளராமல் சிறிய இடத்திலேயே இயங்கிவருவது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. புதிய புத்தகங்கள் வந்தால் கூட அதை வைப்பதற்காக கூடுதல் இடங்கள் தேவைப்படும் நிலையில் தான் இன்னும் இருந்து வருகிறது. அரசு போட்டித் தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள், கொண்டு வந்த மதிய உணவை இருந்து அமர்ந்து உண்டு, பின் படிப்பை தொடரும் வகையில் அதற்கான கூடுதல் வளாகங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது மாணவர்களின் கோரிக்கை. மாணவ மாணவிகள் வாசகர்கள் வருகைக்கேற்ப மைய நூலகத்தின் வடிவம் வளர வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.