செய்தியாளர்: அஜ்மீர் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் நேற்று காலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று மாணவியை கடித்தது. இதையடுத்து அந்த மாணவி கூச்சலிடவே, அவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை அதே இடத்தில் சாலை ஓரத்தில் இளைஞர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது தெருநாய் ஒன்று அந்த இளைஞரை கடிக்க வந்துள்ளது. நாயிடம் இருந்து அந்த இளைஞர் தப்பிய நிலையில், நாய் அவரின் காலணியை கவ்விக் கொண்டு ஓடியது.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று மாலை உழவர்சந்தை பகுதியில் நடந்து சென்றவரை நாய் ஒன்று கடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பழனியில் தொடர்ந்து தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழனி நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடித்து கட்டுப்படுத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.