தமிழ்நாடு

தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள 2000 ஏக்கர் நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள 2000 ஏக்கர் நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

kaleelrahman

தொடர் மழையால் சுமார் 2000 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புரெவி புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் செல்கிறது.


முன்னதாக செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பகுதிகளான வெடால் கடுக்களூர் கரும்பாக்கம் கப்பிவாக்கம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டிற்கான சம்பா சாகுபடி மூலம் 3000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் இப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து தண்ணீர் வடிந்து வரும் நிலையில் தற்போது இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவு வெளியேறுவதால் அப்பகுதியில் செல்லும் ஓடைகள் நிரம்பி கரை உடைந்து உள்ளதால் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் நடவு செய்திருந்த நெல் சாகுபடி நீரில் மூழ்கி அழிந்து வருகிறது.

ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளதாகவும் இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து செலவு செய்த பணத்தை கொடுத்தால் மட்டுமே திரும்ப நெல் சாகுபடி செய்யப்படும் எனவும் இல்லையென்றால் இந்த ஆண்டிற்கான சாகுபடி செய்ய முடியாமல் போய்விடும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

அதேபோல இந்த ஓடையின் குறுக்கே உள்ள சிறிய பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.