கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிக்கும் நிலையில், சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 4-ஆவது நாளாக நேற்றும் நீடித்தது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நாளொன்றுக்கு 1 கோடி லிட்டர் குடிநீர் தேவையாக உள்ளது.
குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பெரும்பாலான மக்கள் கேன் குடிநீரைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அதற்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெரம்பூர் உட்பட சில இடத்தில் குடிநீர் கேன் கிடைப்பதே இல்லை என மக்கள் கூறுகின்றனர். அம்மா குடிநீர் மையத்தில் ஸ்மார்ட் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தண்ணீர் வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீர் பாதுகாப்பு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தால் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உற்பத்தியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளரை கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.