தமிழ்நாடு

”அவ்வை நடராஜன், கம்பீரக் குரலால் பிணிக்கும் பேராற்றல் பெற்றவர்” எம்.பி பாரிவேந்தர் இரங்கல்

”அவ்வை நடராஜன், கம்பீரக் குரலால் பிணிக்கும் பேராற்றல் பெற்றவர்” எம்.பி பாரிவேந்தர் இரங்கல்

JananiGovindhan

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானதை அடுத்து, அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள். அவ்வை நடராஜனினுக்கு காவல்துறை மரியாதை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் அவ்வை நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உரைவேந்தர் என்று தமிழறிஞர்களால் உவந்து போற்றப்பட்ட அறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளையின் அன்பு மகனாகத் தோன்றியவர் நாவேந்தர் அவ்வை நடராஜன். மதுரை தியாகராயர் கல்லூரித் தமிழ்த் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றி ஆன்மீகச் செம்மல் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுக்கெல்லாம் துணைசெய்த பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியில் சேர்ந்து இயக்குநராய் உயர்வு பெற்று பின்பு தமது தகுதிகளால் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அரசுச் செயலராக உயர்வு பெற்றார். தமது ஆழ்ந்த புலமைக்கு அங்கீகாரமாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் அரிய வாய்ப்பைப் பெற்று சிறக்க பணியாற்றினார்.

கவர்ச்சி மிகுந்த தமது கம்பீரமான குரலால் கேட்பவர் உள்ளங்களை எல்லாம் பிணித்து வைக்கும் பேராற்றல் அவருக்கு உண்டு. இசைக் கருவியில் எழும் நாதம் போல் ஒலிக்கும் அவரது குரல் இப்பொழுதும் நம் செவியில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அவர் பங்கேற்காத இலக்கிய அமைப்புகளே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். அவர் கால்படாத கல்வி நிறுவனங்கள் மிகக் குறைவு.

அப்படித் தொடர்ந்து மேடையிலே வீசிக்கொண்டிருந்த அந்த மெல்லிய பூங்காற்று இன்று ஓய்ந்துவிட்டதை நம்பமுடியாத நிலையில் இருக்கிறோம். தமிழ்ப்பேராய விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அப்பெருமகனின் பிரிவு தமிழ் உலகத்திற்கே பேரிழப்பாகும். அவரது புனித ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்”

இவ்வாறாக பாரிவேந்தர் எம்.பி. தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.