தமிழ்நாடு

"எதிர்க்கட்சித் தலைவரை அதிமுக எம்.எல்.ஏக்கள்தான் முடிவு செய்வார்கள்" - பா.வளர்மதி

"எதிர்க்கட்சித் தலைவரை அதிமுக எம்.எல்.ஏக்கள்தான் முடிவு செய்வார்கள்" - பா.வளர்மதி

Sinekadhara

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அதிமுக எம்.எல்.ஏக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான பா.வளர்மதி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது வளர்மதி இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக யார் அமருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தலைமையும் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி முதன் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதனிடையே, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கருப்பனன், சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, வளர்மதி உள்பட வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்கள், 'அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும்' என்று தெரிவித்தனர்.

குறிப்பாக, தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு சகஜம் என்று கூறிய முன்னாள் அமைச்சர்கள், அதிமுக வீழ்ந்துவிடும் என்ற விமர்சனங்களை முறியடித்து அதிமுக கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் அயராத உழைப்பிற்கும், ஆளுமைக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்று புகழாரம் சூட்டினர்.

தலைமையேற்று சேவையாற்றலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சேவையாற்ற கூடிய வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

மொத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரடியான பதில் அளிக்கவில்லை என்றாலும் எடப்பாடி பழனிசாமியின் உடனான சந்திப்பின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது.