‘கலைஞர் நினைவு வித்தகர் விருது’ பெற்ற பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா! எக்ஸ் தளம்
தமிழ்நாடு

‘கலைஞர் நினைவு வித்தகர் விருது’ பெற்ற பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழம்பெரும் பின்னணி பாடகி சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவிற்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கி கௌரவித்தார். மேலும் நீர்வளத்துறை சார்பில் 83 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நீர்வளத் துறை சார்பில் 83 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணை மறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட 19 முடிவுற்ற திட்டப் பணிகளைத்  திறந்து வைத்தார். 

‘கலைஞர் நினைவு வித்தகர் விருது’ பெற்ற பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா 

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றி பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை கவிஞர் முகமது மேத்தா மற்றும்  பின்னணிப் பாடகி பி. சுசீலா அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார்.

அப்போது சுசீலா மற்றும் மேத்தா அவர்களின் உடல் நலனை முதலமைச்சர் விசாரித்தார். நிகழ்வுக்கு உடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர்களிடமும் நலம் விசாரித்தார். பி சுசீலாவுடன் இணைந்து முதல்வர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நெகிழ்ந்தார்.

தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இதன்  அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலைகளை வழங்குகினார். 

தொடர்ந்து மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகியோர் முதல்வரை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.