தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் மே 15 முதல் ஆக்சிஜன் உற்பத்தி - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் மே 15 முதல் ஆக்சிஜன் உற்பத்தி - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Sinekadhara

ஸ்டெர்லைட் ஆலையில் வருகிற 15ஆம் தேதிமுதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைமுறைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரித்துவருகிறது. இன்று தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு குறித்தும் விளக்கமளித்தார்.

அதில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் தொற்று குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்த அவர், தடுப்பூசி குறித்தும், ஆக்சிஜன் படுக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்’’

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, ஸ்டெர்லைட் ஆலையில் எப்போது ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மே 15 முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் எனவும், அதில் ஒருநாளைக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் 700 முதல் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனவும், அதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் குன்னூர் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்தும் விளக்கம் தரப்பட்டது.

அதற்கு, ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டி.ஆர்.டி.ஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மே 12ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.