திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உத்தரவிடக்கோரி வழக்கு. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனக்கூறி வழக்கை மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரையைச் சேர்ந்த விரோனிகா மேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், 'திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளாண்டுகள் செயல்பட்டு வந்தன. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டவை. ஆனால் 2003 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு, செயல்பாடின்றி உள்ளது.
இதேபோல செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அங்கு பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகவேகமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த திருச்சி பெல் நிறுவனத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து, ஆக்சிஜன் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் செங்கல்பட்டில் இயங்கிவரும் ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி எளிதாக சென்றடையும் எனவே, திருச்சி, பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.' என கூறியிருந்தார்.
இந்த மனுவை. விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனக்கூறி வழக்கை மே 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.