இறைச்சிக்கடை file image
தமிழ்நாடு

காணாமல் போன மாடு இறைச்சிக் கடையில் தொங்கியதால் உரிமையாளர் அதிர்ச்சி! என்ன நடந்தது?

ஜெயங்கொண்டத்தில் காணாமல் போன மாடு இறைச்சிக்கடையில் தொங்கியதால் மாட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

PT WEB

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே  உள்ள கொம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய பசுமாடு ஒன்று காணாமல் போயுள்ளது. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் மாட்டின் தலை மற்றும் தோல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கடை உரிமையாளரிடம் மாட்டின் இறைச்சி குறித்துக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாட்டைத் திருடி அதனை இறைச்சியாக்கி விற்பனை செய்ததாக அப்பு என்ற தசரதன், நரசிம்மன், பெரியசாமி, இளவரசன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

மேலும் இவர்கள் 4 பேரும் இதே போல் மாடுகளைத்  திருடி‌ அதனைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் குறித்து இதுவரை எந்த  புகாரும் வராமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.