தமிழ்நாடு

'கூட்டணிதான் ஆனால் தனிச்சின்னம்' - அரசியல் கட்சிகள் அறிவிப்பின் பின்னணி என்ன?

'கூட்டணிதான் ஆனால் தனிச்சின்னம்' - அரசியல் கட்சிகள் அறிவிப்பின் பின்னணி என்ன?

sharpana

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, விசிக, இந்திய ஜனநாயக கட்சிகளும், அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதற்கான பின்னணி என்ன?

தனிச்சின்னத்தில் போட்டி என்பது கூட்டணி பலத்தை பாதிக்குமா? தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்டன.

திமுகவை பொறுத்தவரை கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமைந்த கூட்டணியே சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். மதிமுகவை சேர்ந்த கணேச மூர்த்தியும் ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களவைக்கு சென்றார். ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மதிமுக, விசிக, ஐஜகே கட்சிகள் அறிவித்துள்ளன. இதேபோல அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவும் தனி சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே மதிமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனிச்சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்கவும், அங்கீகாரத்தை நிலைநிறுத்தவும் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பொது சின்னத்தில் போட்டியிடுவதே அந்த கூட்டணிக்கு பலமாக அமையும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.