திருவாரூரில் நகராட்சி விநியோகித்த குடிநீரை அருந்தியதால் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதில், 8 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் நகரில் துர்க்காலயா ரோடு, வ.உ.சி தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் சற்று ஆபத்தான நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் நடத்திய பரிசோதனையில் குடிநீர் பிரச்சனையால்தான் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால்தான் அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நகராட்சி விநியோகிக்கும் குடிநீரை பரிசோதனை செய்யவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ பரிசோதனை செய்யவும் ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டார். அதையடுத்து அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.