பெரம்பலூர் அருகே இருளர் குடியிருப்பு வாசிகள் குடிநீர் தொடங்கி கழிப்பறை வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர். பலமுறை மனுக்கொடுத்தும் தங்களின் கோரிக்கைள் நிறைவேற்றப்படவில்லை என கூறுகின்றனர் அவர்கள்.
செயல்படாத கழிப்பறை, பயன்பாட்டிற்கு வராத நலவாழ்வு மையம், தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் என காட்சியளிக்கிறது பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள இருளர் குடியிருப்பு. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருப்பதால், ரூ.20 லட்ச ரூபாய் மதிப்பில் எங்களுக்காக எங்கள் பகுதியில் நலவாழ்வு மையம் கட்டப்படுமென அரசு சொன்னது. அதன் பணிகளும் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் அது பயன்பாட்டிற்கு வரவில்லை” என்கின்றனர். மட்டுமன்றி மேலும் 8.10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு கழிப்பறைகளும் தண்ணீர் வசதி இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.
மேலும் கழிவுநீர்வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருப்பதால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தூர் வார சொன்னால் தங்களிடம் அதற்கு பணம் கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில், “எங்கள் பகுதிக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. அதனால் குடிப்பதற்கு உப்பு தண்ணீரையே பயன்படுத்துகிறோம். முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தில் 39 வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்தும் 20வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது எங்களில் பலரும் மழைகாலங்களில் தாக்குபிடிக்கா வீடுகளில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்துவருகிறோம்” என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க... இருளர் பழங்குடியினர் வலியை பேசும் ‘ஜெய் பீம்’ - பாராட்டு மட்டுமே போதுமா?
தற்போது கூலிவேலைக்கு செல்லும் தங்களின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதி,வீடு,பட்டா என பல்வேறு கோரிக்கைகளுடன் வாழ்ந்துவரும் இந்த இருளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தாங்கிப்பிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பே ஆகும். பின்தங்கியவர்களின் குரல்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேட்குமா என்பதையும், இந்தப் பகுதி இருளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- துரைசாமி.