தமிழ்நாடு

“நடந்தே சொந்த ஊர் போய் சேருகிறோம்”- போலீஸ் தடுத்ததால் வடமாநிலத்தவர்கள் போராட்டம்

“நடந்தே சொந்த ஊர் போய் சேருகிறோம்”- போலீஸ் தடுத்ததால் வடமாநிலத்தவர்கள் போராட்டம்

webteam

சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல முயன்ற வட மாநிலத்தவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் ஈசிஆர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் புதிதாக கட்டிவரும் பாவினி போன்ற துறைகள் இயங்கி வருகின்றன. இந்த துறைகளில் புதியதாக கட்டப்படுகின்ற கட்டுமான பணிகளுக்கு ஒடிஸா, பீகார் போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பெரிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கினால் இவர்கள் யாருக்கும் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் ஊதியமும் இல்லாமல் உணவுக்கும் கஷ்டப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இவர்கள் சுமார் 300 பேர் தங்களது குடும்பத்துடன் சேர்ந்தால் போதும் என நள்ளிரவு நடந்தே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி கல்பாக்கம் அருகே வெங்கம்பாக்கம் என்ற இடத்தில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த ஆய்வாளர் முனிசேகர், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சமாதானம் பேசி இரண்டு தினங்களில் முறையாக அனுமதி பெற்று அவர்களை அனுப்ப ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.