தமிழ்நாடு

ஊருக்கு போக வழியில்ல.. பசிக்கு உணவு இல்ல.. மதுரையில் தவிக்கும் தொழிலாளர்களின் அவலநிலை

ஊருக்கு போக வழியில்ல.. பசிக்கு உணவு இல்ல.. மதுரையில் தவிக்கும் தொழிலாளர்களின் அவலநிலை

webteam

வெளி மாவட்டத்திலிருந்து மதுரைக்கு கிணறு தோண்டும் பணிக்காக வந்த தொழிலாளர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி வாடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனோ பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பாக திருச்செங்கோடு மாவட்டத்திலிருந்து 10 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் விவசாய கிணறு தோண்டும் பணிக்காக வந்துள்ளனர். பணிகள் துவங்கி சில நாட்களிலேயே கொரோனோ பாதிப்பு காரணமாக பணிகள் முடங்கியதால் தற்பொழுது அன்றாட உணவிற்கே அடுத்தவர்களை நாடும் நிலைக்கு இந்த தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் பணிகளின் அளவை பொருத்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாததால் பொதுமக்கள் உணவு கொடுத்து உதவினால் தவிர நாங்கள் உயிர் பிழைக்க வழியில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “குடும்பத்துடன் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டால் 800 ரூபாய் கூலியாக கிடைக்கும். இதைக் கொண்டு எங்களின் அன்றாட உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து அதில் மிஞ்சும் குறைந்தபட்ச சேமிப்பை பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்து சொந்த ஊருக்கு கொடுத்து விடுவோம்.

ஆனால் தற்போதைய ஊரடங்கு குறைந்தபட்ச சேமிப்பிற்கான தடையை ஏற்படுத்தியுள்ளதுடன் அன்றாட உணவிற்கே வழியில்லாமல் செய்துள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.

பெண் தொழிலாளி ஒருவர் கூறுகையில், “வருமானம் எப்போது வேண்டுமானாலும் ஈட்டலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும் தற்போதைய நிலையில் எங்களின் 3 நேர பசியை போக்குவது மிக கடினமாக உள்ளது. உணவிற்காக அரிசி சிலர் தந்தாலும் மற்ற மளிகை பொருட்கள் ஏதும் இல்லாததால் கஞ்சி புளியை கரைத்து தங்களின் பசியையும் சிறு சிறு பிள்ளைகளின் பசியையும் போக்கி வருவதாக வேதனையுடன் கூறுகிறார். ரேஷன் அட்டையும் தங்களது சொந்த ஊரில் உள்ள நிலையில் அதனையும் தங்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தங்களால் பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருமானம் முற்றிலும் இல்லாத நிலையில் அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். பிழைப்பிற்காக வெளியூர் வந்த இந்த தொழிலாளர்களை கொரோனோ தாக்கம் திக்குமுக்காட வைத்துள்ளது.