தமிழ்நாடு

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவு

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவு

webteam

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் ஹர்மந்தர் சிங் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். மேலும் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறார். அவசரத்தேவைக்காக கொடுக்கப்பட்டு வந்த இபாஸ் தற்போது தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நேற்று ஒருநாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு 18,823 பேருக்கு இபாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை வரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வேலை காரண்மாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.