OPS pt desk
தமிழ்நாடு

மத்திய பட்ஜெட் | “இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் பட்ஜெட்” - ஓபிஎஸ் பாராட்டு

webteam

செய்தியாளர்: அருளானந்தம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் தேனி மாவட்ட ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...

ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு

“மத்திய பட்ஜெட் நல்ல பட்ஜெட். மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் இது. இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக இருக்கிறது. இதன்மூலம், அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கை 5 ஆண்டுகளில் நாம் அடைவோம். இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து அவரிடம் ‘ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது’ குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது சில காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதில் கூட்டணி, அரசியல் என எந்தவித காரணங்களும் கிடையாது. தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே விளக்கம் அளித்திருக்கிறார்” என்றார்.

Nirmala sitaraman

தொடர்ந்து பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் 11,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு எழுப்பிய கேள்விக்கு... “பாதிப்புகளுக்கு உண்டான அரசாணையின் படிதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை” என்று பதிலளித்தார்.