எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.
பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகும் வகையில் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை கடந்த 8 மாதங்களாக செய்து வந்தார். குறிப்பாக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை மிக தீவிரமாக மேற்கொண்டார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் தன் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று மதுரையில் எழுச்சி மாநாடு நடத்துகிறார் இபிஎஸ்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மாலையில் ஓபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் திருச்சியில் ஒரு மாநாட்டை ஏற்கெனவே நடத்திய நிலையில், இபிஎஸ் தென் மாவட்டத்தில் மாநாடு நடத்துவது போல தான் கொங்கு மண்டலத்தில் ஒரு மாநாட்டை நடத்தி அங்குள்ள தன் பலத்தை நிரூபிக்க ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை இன்று மாலை 6 மணிக்கு நடத்தும் ஓபிஎஸ், அதன்பின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.