உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் தாயார் உடலுக்கு, தாய்க்கு தலை மகனாக ஒபிஎஸ் அவர்கள் மொட்டை எடுத்த பின், தாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் (95), கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக தேனியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலம் தேறி சில தினங்களுக்கு முன் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக, தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம், தன் தாயாரை மருத்துவமனையில் சென்று சந்தித்து, நலம் விசாரித்துவிட்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி, மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பெரியகுளத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட தாயார் பழனியம்மாள், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் நேற்று இரவு 10.02 மணியளவில் காலமானார்.
தகவல் அறிந்த ஓ. பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் இல்லத்திற்கு சென்று, தாயாரின் உடலை பார்த்த பின், தன் தாயின் காலை பிடித்து கதறி அழுதார்.
இந்நிலையில் இன்று காலை முதல் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நேரடியாக அஞ்சலி செலுத்திவிட்டு ஓபிஎஸ்-க்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தேனி மாவட்டத்தின் திமுகவினர், விடுதலை சிறுத்தை கட்சியினர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்த பின், ஓபிஎஸ்-ன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கிய தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேராக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஊர வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, “தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திமுக சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினோம். தாயாரை இழந்து வாடும் ஓ பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.
இறுதியாக மாலை 3.30 மணியளவில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளுக்கு வீட்டில் உறவினர்கள் மற்றும் பெண்கள் கூடி இறுதி அஞ்சலி செலுத்திய பின்பு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் தேரில் வைக்கப்பட்டு, பெரியகுளம் தென்கரை தெற்கு அக்கரகாரத்தில் இருந்த அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு, தேவர் சிலை மற்றும் காந்தி சிலை வழியாக வடகரை பகுதியில் உள்ள நகராட்சியின் பொது மயானத்தில் உள்ள எரியூட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது தாய்க்கு தலைமகனாக இருந்த ஓபிஎஸ் மொட்டை அடித்த பின்பு, தன் தாயின் பூத உடலுக்கு இரவு 7 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஓபிஎஸ் தனது தாயின் உடலுக்கு தீ மூட்ட, உடல் தகனம் செய்யப்பட்டது.