நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏறத்தாழ இன்னும் 15 நாட்களே உள்ளன. இதற்காக அனைத்து கூட்டணிகளும், கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றன. இதற்கிடையே கச்சத்தீவு விவகாரம் வேறு களத்தை மேலும் சூடுபடுத்தியுள்ளது. இதைத்தாண்டி கட்சிகளின் வாக்குறுதிகள், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள், அதற்கான எதிர்வினைகள் என்று பரபரக்கிறது தமிழ்நாட்டு அரசியல் களம்.
இதுஒருபுறம் இருக்க, பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு அவர் தேர்தலில் வெற்றிபெறுவது மிகவும் அவசியம் என கருதுகிறது ஓபிஎஸ் தரப்பு.
தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தொகுதியில் தீவிரமாக அவர் வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். அதன் பிறகு பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டேன் என்று மழுப்பலாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்பகுதியில் இருக்கும் நிரந்தர குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நல்ல ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன்” என தெரிவித்தார்.