தமிழ்நாடு

``எம்.எல்.ஏ. சங்கர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்” ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். தனித்தனி அறிக்கை

``எம்.எல்.ஏ. சங்கர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்” ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். தனித்தனி அறிக்கை

நிவேதா ஜெகராஜா

சென்னை மாநகராட்சி அதிகாரியை திமுக எம்எல்ஏ தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரியை தாக்குவது அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். சாலை பணிகள் நடைபெற்ற இடத்திற்கு திமுக எம்எல்ஏ ஏன் சென்றார், ஒப்பந்ததாரரிடம் என்ன பேரம் பேசப்பட்டது, ஏன் யாரும் எந்த புகாரும் தரவில்லை என்பதையெல்லாம் விசாரித்து, எம்.எல்.ஏ. சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக எம்.எல்.ஏ. அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதன்பின்னரும் அவரது கட்சி பொறுப்பை மட்டும் பறித்துவிட்டு, வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து,சாலை போடும் ஊழியர்களை மிருகத்தனமாகத் தாக்கிய திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவு ரவுடிகள் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன்” எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.