OPS file
தமிழ்நாடு

"நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்" - ஓ.பன்னீர்செல்வம் உறுதி

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம் அதில்தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

webteam

செய்தியாளா: T.சந்தானகுமார்

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை மேற்கொண்டார். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ,எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

election commission

சரியாக 11.20 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில், 12 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் இணைந்தார். இதைத் தொடர்ந்து 1.10 மணி வரை பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், குப.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தல் குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது, ஒரே இடத்தை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளது. எனவே பேசி ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும். இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம் அதில்தான் போட்டியிடுவோம்" என்றார்.

ops, ttv dhinakaran

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம். தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் எந்த அச்சுறுத்தலும் இல்லை, உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் குக்கர் சின்னம் வேண்டும் என கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

எங்கள் கட்சியில் பலர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகள் பட்டியலை கொடுத்துள்ளோம், குக்கர் சின்னத்தை தற்போது வரை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவேதான் அது வேண்டும் என கேட்டுள்ளோம். எங்கள் இலக்கு திமுக என்ற தீய சக்தியை முறியடிக்க வேண்டும், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வந்தால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டணி அமைத்துள்ளோம்.

பாஜக, மோடி

யார் பெரியவர், யார் சிறியவர் என்றெல்லாம் இல்லை. ஒரே குறிக்கோள் என்டிஏ கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல, அகதிகளாக வரும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் நோக்கில் சிலர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஆனால் இங்குள்ள நபர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.

இந்தியாவில் உள்ள யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. தேர்தல் நேரத்தில் இந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என தெரு தெருவாக கொண்டு சென்று இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம். தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்" என்றார்.