தமிழ்நாடு

"தயவுசெய்து அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

"தயவுசெய்து அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

Sinekadhara

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக தொண்டர்களை அமைதி காக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்களில் சிலர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர் செல்வம் தான் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது. இதையடுத்து, அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் நேரடியாக வந்து சமரசத்திற்கு ஈடுபட்டு கோஷம் எழுப்பியவர்களை சமாதானப்படுத்தினர்.

தற்போது, ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் ஆலோசனை நடத்தினர். அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் சிலர் சந்தித்தனர். இந்நிலையில் இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவரை பார்ப்பதற்காக கட்சி தொண்டர்கள் பலர் காத்திருந்தனர். அவர்களை ஓபிஎஸ் சந்தித்தார். இதற்கிடையே இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்தித்துவிட்டு வரும் தலைவர்கள், 23ஆம் தேதி வரை பொறுத்திருக்குமாறும், தலைமை யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்விக்கு பெரியவர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.